×

ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் கட்டும் பணிகள் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பாலம் கட்டும் பணிகள் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை பேசுகையில், முதல்வர் வெளிநாடு சென்று வரலாறு காணாத அளவிற்கு நிதிகளை பெற்று வந்துள்ளார். அந்த முதலீடுகள் எல்லாம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை நோக்கி வருகின்றது. ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 36 சதவீதத்துக்கு அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்ற பகுதி பெரும்புதூர். ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைப் போக்குவதற்கும் நிவாரணம் செய்து தருவதற்கும் ஏதாவது புதிய திட்டம் அரசிடம் இருக்கின்றதா. அதேபோல் பெரும்புதூர் பாலம் நீண்ட நாட்களாக பணிகள் முடிக்கப்படாமல் இருக்கின்றது. அதனை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: புதிய திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் ஐந்து கட்டமாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு புறவழிச்சாலை அமைத்துள்ளோம். திருவள்ளூரில் ஆரம்பித்து பெரும்புதூர் வரையிலும் பெரும்புதூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் அங்கிருந்து மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமம் வரை இணைக்கும் திட்டம். அந்த திட்டம் பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை இணைக்கும் பகுதியில் தான் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.

எங்கெல்லாம் நான்கு வழி சந்திப்புகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பாலம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் கூட போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள் போட முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகின்றோம். பெரும்புதூர் பாலம் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இரண்டொரு மாதங்களில் அந்த பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றது. அந்த சாலையை பொறுத்தவரை முதலமைச்சர் மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காரணம் என்னவென்றால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கு செல்வதற்கு சாலைகள் தேவை. ஆகவே இது அரசு சாலைகள்போடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்ற காரணத்தால் தான் இந்தத் துறையில் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றோம். எனவே நீங்கள் சொல்கின்ற கோரிக்கைக்கும் கட்டாயம் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

The post ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் கட்டும் பணிகள் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Minister ,AV Velu ,Chennai ,AV ,Velu ,Legislative Assembly ,Sriperumbudur Constituency Congress ,MLA ,Selvaperunthakai ,Chief Minister ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்